தீபாவின் கணவர், டிரைவர் வரும் போது ரஜினி அரசியலுக்கு வருவதில் தப்பில்லை! ராதாரவி பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என நாமக்கல்லில் நடிகர் ராதாரவி கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற சினிமா படம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா நடித்து உள்ளார். இயக்குனர் ஐக் இயக்கி உள்ளார். இந்த படம் வெளியாவதை தொடர்ந்து நடிகர் ராதாரவி மற்றும் இயக்குனர் ஐக், நடிகர் ஜீவா ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வந்தனர். சாமிதரிசனம் செய்த பின்னர் நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.


இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. தற்போது பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வில் இருக்க எனக்கு தகுதி இல்லை என கருதுகிறேன்.

பொதுமக்கள் கருத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வரவேண்டும் என உள்ளது. அவருக்கு எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே நானும் அந்த கருத்தை சொன்னேன். தற்போது தி.மு.க.வின் கோட்டையில் இருந்து அந்த கருத்தை தெரிவித்து வருகிறேன். அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post