கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் ரஜனி திடீரென களமிறங்க யார் காரணம்?

திமுக தலைவர் கருணாநி ஆக்டிவாக இல்லாத நேரத்தில், ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், ரஜினி அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.

இதன் மூலம் இத்தனை காலமாக இவர்கள் இருவரையும் எதிர்த்து அரசியல் செய்யும் துணிச்சல் அவருக்கு இல்லாமல் இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம், துணிச்சலாக எதிர்நீச்சல் போட்டு அரசியல் செய்யும் தைரியம் அவருக்கு இல்லையா.

அதனால்தான் எதிர்ப்பே இல்லாத சூழலில் அரசியலில் குதிக்க அவர் முடிவு செய்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரது அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

22 வருடமாக இல்லாத ஆர்வம்
 22 வருடங்களுக்கு முன்பே ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வந்து விட்டனர் மறைமுகமாக. பாட்ஷா விழாவில் அவர் பேசிய பேச்சு, அதனால் ஜெயலலிதாவுக்கு வந்த கோபம், ரஜினி காரை நிறுத்தி போலீஸார் சோதனை போட்டது என பிரச்சினை அன்றே தொடங்கி விட்டது.

ஆவேசப் பேச்சு
 ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி கொந்தளித்தபோது அதை கப்பென பிடித்துக் கொண்டது திமுக. கருணாநிதியின் சாதுரியத்தாலும், மூப்பனாரை சரியாக பயன்படுத்திக் கொண்டதாலும், ரஜினியை வைத்து திமுக - தமாகா கூட்டணி லாபம் பார்த்தது. ஜெயலலிதா வீழ்த்தப்பட்டார்.


சுதாரித்த ரஜினி
 பின்னர் ரஜினி சுதாரித்துக் கொண்டார். மெதுவாக அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். ஆனாலும் அவ்வப்போது வாய்ஸ் கொடுத்தார். அந்த வாய்ஸுக்கு பின்னர் மக்களிடம் அறவே மதிப்பில்லாமல் போனதைத் தொடர்ந்து அதையும் நிறுத்திக் கொண்டார் ரஜினி.

எத்தனையோ பேர் இழுத்தும்
 ரஜினியை நேரடி அரசியலுக்கு பல கட்சிகளும் இழுத்துப் பார்த்தன. கருணாநிதியே கூட கடுமையாக முயற்சித்தவர்தான். ஜெயலலிதாவும் கூட நட்பு பாராட்டியே வந்தார். காங்கிரஸும், பாஜகவும் ரஜினி வரவுக்காக காலில் விழாத குறையாக உருண்டு புரண்டு கொண்டிருந்தன. ஆனால் ரஜினி யார் பக்கமும் சேரவில்லை.

புதிய சூழல்
 இந்த நிலையில்தான் தற்போது ரஜினி அரசியல் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். இதுதான் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. இத்தனை காலமாக இல்லாத ஆர்வம் இப்போது ஏன் என்று பலருக்கும் குழப்பம்.

கருணாநிதி- ஜெயலலிதா இல்லாத காரணத்தாலா?
 ஆனால் ஜெயலலிதா இல்லாததாலும், கருணாநிதி முன்பு போல தீவிர அரசியலில் இல்லாத காரணத்தாலும்தான் ரஜினி அரசியலிக்கு வர ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. இருவரும் தீவிர அரசியலில் இருந்தபோது மூச்சு கூட காட்டாத ரஜினி இப்போது வருகிறார் என்றால் நிச்சயம், கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்பதைத் தவிர வேறு பெரிய காரணம் இருக்க முடியாது என்பது பலரின் கருத்தாக உள்ளது.

பின்னணியில் யார்
 அதேசமயம், ரஜினியின் பின்னால் சிலர் இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. அவர்களின் யோசனையைத்தான் ரஜினியும் பரிசீலிக்க ஆரம்பித்திருப்பதாகவும், அதன்படியே அவர் திட்டமிட்டு செயல்படுவதாகவும் பேசப்படுகிறது. உண்மை எது என்று தெரியவில்லை. ஆனால் தமிழக மக்கள் முன்பை விட தெளிவாக இருக்கிறார்கள் என்று உலகம் நம்ப ஆரம்பித்துள்ளது. அதை ரஜினி உள்பட அனைவருமே மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post