ஊழலை ஒழிக்க தனிகட்சி தொடங்குவேன்: கமல்ஹாசன் பகீர் பேட்டி!!!!

நடிகர் கமல்ஹாசன் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. எனக்கும் அரசியல் பற்றிய எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சிந்தனைகள் பொருந்தவில்லை. ஒத்துப்போகவில்லை.

சமீபத்தில் கேரள முதல்- மந்திரியை சந்தித்தேன். உடனே கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக செய்திகள் வந்தன. நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை.

அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாற்றத்தை கொண்டு வர சிறிது தாமதம் ஆகலாம்.

அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தொடங்குவேன். மாற்றத்தை நான் முன்எடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள்.


இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. இதில் மாற்றம் வரவேண்டும். ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம். 5 வருடம் தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயல் படாவிட்டால் 5 வருடங்கள் காத்து இருந்து ஓட்டுப் போட்டு மாற்றும் நிலை இருக்க கூடாது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் உடனே அவர்களை மாற்றும் நிலை வரவேண்டும் புதிய மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும்.

ஏனென்றால் அடுத்த வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால் முதலில் என் வீட்டை நான் சுத்தப்படுத்த வேண்டும். இதுதான் என் எண்ணம். சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post