கர்ப்பிணிகள் இந்த இரு காய்ச்சல்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும் தெரியுமா..?

கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பானது. வழக்கமாக வரும் சாதாரண காய்ச்சலைத் தாண்டி, இன்னும் இரண்டு முக்கியமான காய்ச்சல்களும் இருக்கின்றன. கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அந்த இரண்டு காய்ச்சல்கள் பற்றியும் பார்த்துவிடலாம்...

சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது கர்ப்பிணிக்கோ, கருவில் வளரும் சிசுவுக்கோ அவ்வளவாக ஆபத்து ஏற்படுவதில்லை. அப்படியே ஆபத்து இருந்தாலும், இன்றைய நவீன சிகிச்சைகளால் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும். ஆனால், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கர்ப்பத்தின் காரணமாக இவற்றின் விளைவுகள் கடுமையாகிவிடும் என்பதால் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது.

பன்றிக்காய்ச்சல்

இன்ஃபுளுயன்சா A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் பன்றிக்காய்ச்சல் நோய் வருகிறது. கர்ப்பிணிகளை இது பாதித்தால், காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு வந்துவிடும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம். குழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகலாம். 

இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கர்ப்பிணிகள் முகத்தை மூடிக்கொள்வதற்கு முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடி அணிந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும். 
வீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி(Trivalent inactivated vaccine - TIV) பன்றிக்காய்ச்சலைத் தடுக்கிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பும் இதைப் போட்டுக் கொள்ளலாம்; கர்ப்பம் ஆன பிறகும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க ‘நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்து’ ஒன்று உள்ளது. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது. 

டெங்கு(Dengue) 

டெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் ஆபத்துகள் அதிகம். 

குறைப்பிரசவம் ஆகவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணியிடமிருந்து சிசுவுக்குக் கிருமிகள் பரவி, பிறக்கும் போதே குழந்தைக்கு டெங்கு வரலாம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம்.

எனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, இந்த விபரீத விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post