கீரைகளின் அரசி கரிசலாங்கண்ணியை சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?

உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, கீரைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஓர் அரிய வகையான கீரை. இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

கண் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது. தசையை விரைக்கச் செய்யும் உபாதையை போக்க பயன்படுத்தப்படும் மருந்தில், இது முக்கியமாக சேர்க்கப்படுகிறது. உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்துகிறது. தோல் வியாதிகளுக்கும் நிவாரணம் தருகிறது.

இந்த கீரையை உண்பதாலும், இதன் சாறை, தலையில் தேய்ப்பதாலும், முடிக்கு கருமை வண்ணம் கொடுக்கிறது.


எடை, உடல் பருமன், தொந்தியை கரைக்க விரும்புவோர், இக்கீரையை, தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோகை, காமாலை முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலைப் பலப்படுத்தும். பித்த நீர்ப்பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். 

இலைகளே முக்கியமாக மருத்துவத்தில் பயன்படுகின்றன. மலச்சிக்கல் தீரும். தொடர் இருமல் இருந்தால், இலைச்சாறு, அரை லிட்டர், நல்லெண்ணெய் சிறிதளவு கலந்து காய்ச்சி, வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை வேளைகளில் ஒருவாரம் வரை சாப்பிட்டு வர வேண்டும். இலையை, பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் சேர்த்து, சாதத்துடன் பிசைந்து உட்கொள்ள மலச்சிக்கல் தீரும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை, நான்கு மாதங்களுக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா தொல்லை குறையும். இதன் சாற்றை, காலையில் தினம், 30 மி.லி. சாப்பிட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல் குணமாகும். குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்துக்கும், கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிது கொடுத்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

கீரையை சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறம் பெறும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில், தேவையான அளவு கரிசலாங்கண்ணி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி, தலையில் தேய்த்து வர தலைமுடி நன்றாக வளரும். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post