எந்த உணவுடன் நெய்யை சேர்த்து சாப்பிடலாம்... எப்படி சாப்பிடலாம்?

இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருள், நெய். நெய்யை உருக்கிச் சாப்பிடுவதால், மருத்துவப் பலன்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இது கெட்டது என்றும் கெட்ட கொழுப்பு உள்ளது என்றும் பரவலாகச் சொல்லப்படுகிறது. `இது தவறான கருத்து. நெய் நல்லதுதான். ஆனால், அது சுத்தமான பசுநெய்யாக இருக்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

பசு நெயில் நல்ல கொழுப்பு உள்ளது. உடலுக்குப் பல வழிகளில் நன்மையை செய்யக்கூடியது. ஆனால் எப்படி, எந்த முறையில், எந்த உணவுகளுடன் சேரும்போது, இது ஆரோக்கியம் தரும் என்பதில்தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது. எந்த நெய் நல்லது, அதை ஆரோக்கியமான முறையில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆயுர்வேத மருத்துவப்படி, பசுநெய் தான் சிறந்தது. எருமை மாட்டுப் பாலால் தயாரிக்கப்பட்டதைத் தவிர்ப்பதே உடலுக்கு நல்லது. ஏனெனில், இதில் அதிகக் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் வனஸ்பதி, தாவர எண்ணெய், விலங்குகள் கொழுப்பு போன்ற கலப்படங்கள் சேர்க்கப்படுவதால், உடலில் `எல்டிஎல் கொலஸ்ட்ரால்’ என்னும் கெட்ட கொழுப்பு சேர்ந்து, இதயக்குழாய் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும். உடனே, நெய்யைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சுத்தமான பசுநெய்யைத் தேர்ந்தெடுத்து வாங்கிப் பயன்படுத்துவதே சரியான வழி. அதைப் பயன்படுத்துவதுதான் நல்லது என்று ஆயுர்வேத மருத்துவமும் பரிந்துரை செய்கிறது.

யார் சாப்பிடலாம்... எப்படி சாப்பிடலாம்?

* ஒரு வயது குழந்தை முதல் ஐம்பது வயதுள்ள பெரியவர் வரை பசுநெய்யைச் சாப்பிடலாம்.

* சாப்பாட்டின் முதல் கவளத்திலேயே பிசைந்து சாப்பிட வேண்டும்.  

* மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

* இதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது.

* எண்ணெய்க்கு பதிலாக, நெய் ஊற்றி தோசை வார்த்தால், மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க வேண்டும்.

* மதிய உணவில் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவு உணவில் சேர்த்தால், செரிமானமாக தாமதமாகும்.

* சூடாக சமைத்த உணவில் மட்டுமே சேர்க்க வேண்டும் அல்லது பசுநெய்யை உருக்கிய பிறகுதான் சாப்பிட வேண்டும். சூடு இல்லாத உணவுகள், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளில் விடக் கூடாது.

* பாசிப்பருப்போடு சேர்ப்பதால், இதில் உள்ள அதீதக் கொழுப்பு, பருப்பின் புரதச்சத்தோடு சேர்ந்து குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் சேர வழிவகுக்கும்.  

* பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால் போன்ற அசைவ உணவுகளோடு சேர்க்கக் கூடாது. இரண்டிலும் கொழுப்பு அதிகம் என்பதால் செரிமானமாக தாமதமாகும். 

* நாட்டுப் பசுநெய்யில் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்துள்ளது. இது உடலுக்கு நன்மையைச் செய்யும்.


* உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் (HDL Cholesterol) அளவை அதிகரிக்க உதவுகிறது. ரத்தத்தோடு பயணிக்கும் இந்த நல்ல கொலஸ்ட்ரால், இதயக்குழாயில் படியாது. 

* மூளை நரம்புகளைச் சுறுசுறுப்பாக்கும் ஊக்கியாகச் (Catalyst) செயல்படுகிறது. மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

யார் தவிர்க்க வேண்டும்?

செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, வாந்தி வரும் உணர்வு, கல்லீரல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்சனை இருப்போர் தவிர்க்க வேண்டும்.

சுத்தமான நாட்டுப்பசுநெய் எங்கு கிடைக்கும்?

சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் உள்ள ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும். இது மணல் மணலாக பொன்நிறத்தில் இருக்கும். இதில் இருந்து நல்ல நறுமணம் வரும். சாதாரணக் கடைகளில் கிடைக்கக்கூடியதைவிட விலை சற்றுக் கூடுதலாக இருக்கும்.

பசு வைத்திருப்பவர்கள், விற்கும் நெய்யை வாங்கிப் பயன்படுத்தலாம்.

பிராண்டுகளாகப் பார்த்து வாங்காமல், வீட்டு அருகில் அல்லது தெரிந்தவர் மூலம், விற்கும் இடங்களைத் தெரிந்துகொண்டு வாங்கலாம்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post