கணவன் தலைமறைவு... குழந்தையுடன் கணவரை தேடி அலையும் பெண்!!

கேரள மாநிலம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் அசாம் மாநிலத்திற்கு கட்டிட பணிக்காக சென்றார். அப்போது அந்த வாலிபருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த ஹாஜிரா பேகம் (வயது 23) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த கேரள வாலிபர் ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர், அசாமுக்கு திரும்பி செல்லவில்லை.

இதை தொடர்ந்து ஹாஜிரா பேகம் தனது கைக்குழந்தையுடன் காதல் கணவரை தேடி அசாமில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டார். திருவனந்தபுரத்திற்கு வந்த அவர், அங்கிருந்து பெரும்பாவூர் செல்லும் கேரள அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

அந்த பஸ், நேற்று அதிகாலை பெரும்பாவூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கேரள அரசு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹாஜிரா பேகம் உள்பட பஸ்சில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஹாஜிரா பேகம் மயங்கியதால் அவரது கையில் இருந்த குழந்தை பஸ்சுக்குள் உருண்டு கிடந்தது. விபத்து பற்றி அறிந்ததும் மீட்புப்பணியில் ஈடுபட்ட போலீசார் மயங்கி கிடந்த ஹாஜிரா பேகத்தை பெரும்பாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


குழந்தை யாருடையது என்று தெரியாததால் அந்த குழந்தையை சிகிச்சைக்காக கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையில் மயக்கம் தெளிந்த ஹாஜிரா பேகம் தனது குழந்தையை காணாமல் கதறி துடித்தார். அதன் பிறகு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு அந்த குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தைக்கு முத்தமிட்டு ஹாஜிரா பேகம் ஆனந்த கண்ணீருடன் கொஞ்சினார்.

மேலும் அவர், தன்னை கைவிட்ட கேரள வாலிபரை தேடி இங்கு வந்துள்ள தகவலையும் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் அவரிடம் அந்த வாலிபரின் சரியான முகவரி இல்லாததால் அந்த வாலிபரை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post