இரட்டை இலை எமக்கே சொந்தம்... உரிமை கோரி தீபாவும் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளைத் தொடர்ந்து, அதிமுகவுக்கு சம்பந்தமே இல்லாத தீபா அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி, தேர்தல் கமி‌ஷனிடம் 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை நேற்று தாக்கல் செய்தனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது.

சின்னத்தைத் திரும்பப் பெற தேர்தல் கமி‌ஷன் உத்தரவுக்கு இணங்க, சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. (அம்மா) அணியினரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினரும் போட்டி போட்டு கட்சி நிர்வாகிகளின் பிரமாண பத்திரங்களை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்து வருகிறார்கள்.

லாரிகளில்
இரு தரப்பும் லாரிகளில் பிரமாணப் பத்திரங்களைக் கொண்டு போய் குவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் இதுவரை 3 லட்சத்து 98 ஆயிரத்து 632 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் அணி
இந்த நிலையில் நேற்று, அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் 1 லட்சத்து 70 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், வக்கீல் பாபு முருகவேல் ஆகியோர் இந்த பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

தீபா பேரவை
இந்த நிலையில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் கமி‌ஷனிடம் நேற்று 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். விரைவில் மேலும் பல லட்சம் பத்திரங்களைக் கொண்டு வரப் போவதாகக் கூறியுள்ளனர்.

விளையாட்டுத் தனம்
இதனை அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், "எந்த அடிப்படையில் இந்த தீபா இரட்டை இலைக்கு உரிமை கோருகிறார்? குறைந்தபட்சம் அதிமுக உறுப்பினராகக் கூட இல்லாதவர் அவர். சம்பந்தமே இல்லாத தீபா அணியினர் யாருக்காக, எதற்காக பிரமாண பத்திரங்களை கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தீபா பேரவை அ.தி.மு.க. சார்பு அணி அல்ல. எனவே, அவர்களது செயலை விளையாட்டுத்தனமான செயலாக நினைக்கிறோம்," என்றார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post