பட்டப் பகலில் சென்னை புதுமண தம்பதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு... நடந்தது என்ன..?

உத்தரபிரதேச மாநிலத்தில், சென்னை தம்பதி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். தாடையில் குண்டு துளைத்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததில், மனைவிக்கு கையில் எலும்பு முறிந்தது. கணவன்-மனைவி இருவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் ஆதித்யகுமார் (வயது 31). இவர், சென்னை வளசரவாக்கம், ராமாபுரம், ஆனந்தம் நகர், 4-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, ராமாபுரத்தில் உள்ள எல்.அன்.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இவர், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கர்நாடக மாநிலம், குல்பர்காவைச் சேர்ந்த விஜயலட்சுமி(28) என்ற பெண்ணை காதலித்தார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்தோடு கடந்த மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதிகள், சென்னை ராமாபுரம் பகுதியில் வேறு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகும் இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆதித்யகுமாரின் அத்தை வீடு உள்ளது. புதுமண தம்பதிகளை அவர் விருந்துக்கு அழைத்தார். இதனால் ஆதித்யகுமார், தனது காதல் மனைவி விஜயலட்சுமி மற்றும் நண்பர் சியாம் தேஜா ஆகியோருடன் கடந்த 3-ந் தேதி விமானம் மூலம் ஹரித்துவாரில் உள்ள அத்தை வீட்டுக்கு சென்றார்.

அங்குள்ள இடங்களை 3 பேரும் சுற்றி பார்த்தனர். நேற்று இவர்கள் விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதாக இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புதுமண தம்பதிகள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், நண்பர் சியாம்தேஜா மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹரித்வார்-டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாகேவாலி போலீஸ் நிலையம் எதிரே சென்று கொண்டு இருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், திடீரென ஆதித்யகுமார் அருகில் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் துப்பாக்கி தோட்டா, ஆதித்யகுமார் அணிந்து இருந்த ஹெல்மெட்டின் பக்கவாட்டை துளைத்து அவரது தாடையை கிழித்துக்கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதில் நிலை குலைந்து போன ஆதித்யகுமார், தனது மனைவியோடு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் விஜயலட்சுமியும் காயம் அடைந்தார். உடனே அந்த மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சத்தம் கேட்டதும் முன்னால் சென்று கொண்டு இருந்த நண்பர் சியாம்தேஜா திரும்பி வந்து படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்ததில் விஜயலட்சுமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கி குண்டு துளைத்ததால் ஆதித்யகுமார், மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அவரது நண்பர் சியாம்தேஜா தெரிவித்தார்.


இந்த சம்பவம் குறித்து ஆதித்யகுமாரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஹரித்துவார் மற்றும் சென்னையில் உள்ள அவருடைய உறவினர்கள் அங்கு விரைந்து சென்று உள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் படுகாயத்துடன் உயிர் தப்பிய சென்னை புதுமண தம்பதி, தற்போது நல்ல நிலையில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்மநபர்கள் ஆதித்யகுமாரை எதற்காக துப்பாக்கியால் சுட்டனர்?, அவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ஆள் மாறாட்டத்தில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா? அல்லது முன் விரோதம் காரணமாக அவரை பின்தொடர்ந்து வந்து யாராவது இந்த செயலில் ஈடுபட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதித்யகுமார், தான் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா? அல்லது காதல் திருமணம் என்பதால் அதில் ஏதாவது தகராறு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் ராயலா நகர் போலீசார், ஆதித்யகுமாரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post