சசிகலா பற்றிய குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறேன்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பேட்டி!!!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், கைதிகளுக்கு தாராளமாக போதை பொருட்கள் கிடைக்கிறது என்றும் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து சிறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மைசூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். சிறையில் முறைகேடு நடப்பதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முதலில் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து இருக்கவேண்டும். அதுபோல் அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கவேண்டும்.

ஆனால் அதற்கு முன்பாக தொலைக்காட்சி சேனல்களை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து பேசியது தவறானது. அதுவும் அடிக்கடி தொலைகாட்சி சேனல்களை சந்தித்து பேசியது சரியானது அல்ல. போலீஸ் மற்றும் சிறைத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு என்று தனியாக விதிமுறைகள் உள்ளன. எனவே, இது விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி டி.ஐ.ஜி. ரூபாவுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


நோட்டீசு அனுப்பப்பட்டது குறித்து டி.ஐ.ஜி. ரூபா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

“பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றால் உண்மைகள் அனைத்தும் வெளிவரும். லஞ்சம் பெறப்பட்டதாக நான் கூறிய குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறேன். இதில் எந்த விதமான விசாரணையையும் சந்திக்க தயார். லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான தகவல்களை எந்த இடத்திலும் நான்வெளியிடவில்லை. விதிமுறைகள் எதையும் மீறவில்லை. நியாயமான விசாரணைக்கு ஒத்துழைப்பேன்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை ரகசியங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக என்மீது குற்றம்சாட்டப்படுகிறது. விதிமுறைகளை மீறி பேட்டி அளித்ததாக எனக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. இது எந்த வகையில் நியாயம்.

பெலகாவி இண்டல்கா சிறையில் டி.ஜி.பி. சத்தியநராயராணராவுக்கு ஆதரவாக கைதிகள் மவுன போராட்டம் நடத்தியதாக பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் செய்திகள் படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் பெலகாவி சிறை சூப்பிரண்டுக்கு எந்தவித தொடர்பும் இல்லை.

அப்படி இருக்க அவர் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டுடன் சேர்ந்து விதிகளை மீறி பேசி வருகிறார். சமூக வலைத்தளங்களில் கைதிகள் செய்யும் நல்ல செயல்கள் பற்றித்தான் தகவல்களை வெளியிட்டேன். சிறைத்துறை டி.ஜி.பி. பேட்டி அளித்ததற்குபின்னர்தான் சம்பவம் குறித்து நான் கருத்து தெரிவித்தேன். என்னை மட்டும் குறிவைப்பது நியாயமற்றது. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் எடுக்க வேண்டும்.”

இவ்வாறு சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறினார். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post