படிக்கட்டில் நிற்காதீங்க மேல வாங்க... கண்டித்த பஸ் டிரைவருக்கு மாணவர்கள் செய்த வெறிச்செயல்!!!

இன்றைய இளைய தலைமுறை எல்லாவற்றையும் சீக்கிரம் கற்றுக் கொள்கிறது. அதேபோல்,பிறரது அறிவுரைகளை உதாசீனப்படுத்தும் குணமும் அதிகம் இருக்கிறது. அதற்கு,லேட்டஸ்ட் உதாரணம் கரூரில் நடந்திருகிறது.

'படிக்கட்டில் நிற்காதே,மேலே ஏறி வா' என்று அறிவுரை வழங்கிய அரசு பஸ் டிரைவர் கழுத்தில் பிளேடால் கிழித்துவிட்டு தப்பித்த பள்ளி மாணவர்களால் அதிர்ந்து கிடக்கிறது கரூர்.

கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் சிவக்குமார். அரசு பஸ் டிரைவர். காட்டுப்புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சிவக்குமார் பணிபுரியும் பஸ்ஸில் கண்டக்டராக இருக்கிறார்.

இருவரும் கரூரில் இருந்து மூலிமங்கலம் வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்ஸில் பணிபுரிகிறார்கள். மாலை வழக்கம் போல் மூலிமங்கலம் நோக்கி பஸ் சென்றபோது, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பஸ் நிறுத்தத்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.

இதைக் கண்ட கண்டக்டர் ராஜேந்திரன்,'படிக்கட்டில் நின்னா, கீழே விழுந்துடுவீங்க. மேலே ஏறி வாங்கப்பா' என்று கண்டித்திருக்கிறார். ஆனால்,கண்டக்டர் அறிவுரையை உதாசீனப்படுத்திய மாணவர்கள், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்ற, அந்த மாணவர்கள் கண்டக்டர் ராஜேந்திரனை தாக்கியுள்ளனர். இதை கண்ட பஸ் டிரைவர் சிவக்குமார் பஸ்ஸை நிறுத்தியதோடு, மாணவர்களிடம் இருந்து ராஜேந்திரனை மீட்க முயன்றிருக்கிறார். அப்போது,மாணவர்களின் ஆத்திரம் இவர் மீதும் திரும்ப,சிவக்குமாரையும் தாக்கி இருக்கிறார்கள்.

 அதில் ஒரு மாணவன் கையில் இருந்த பிளேடால் சிவகுமார் கழுத்தில் அறுத்துவிட்டு,ஓடி இருக்கிறான்

மற்ற மாணவர்களும் இறங்கி ஓடி தப்பி இருக்கிறார்கள். காயமடைந்த சிவக்குமார், ராஜேந்திரன் இருவரையும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டு பயணிகள் சேர்த்துள்ளனர். அதற்குள் இந்த தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்ட அந்த பகுதி வழி சென்ற பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,அவ்வழியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வேலாயுதம்பாளையம் போலீஸார் வந்து, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்னதை அடுத்து,அ வர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

 "பள்ளி மாணவர்கள் இப்படி பிளேடு போடும் அளவுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியா இருக்கு. கொஞ்சம் அழுத்தி அறுத்திருந்தாலும், டிரைவரின் உயிருக்கு ஆபத்து வந்திருக்கும். இளைய தலைமுறை போகும் போக்கை பார்த்தா,பயமா இருக்கு" என்று அதிர்ச்சிக் காட்டுகிறார்கள் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள்.

இதில், இன்னும் கொடுமையாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவக்குமார் மற்றும் ராஜேந்திரன் இருவருக்கும் அங்குள்ளவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்காமல்,'தையல் போட எங்களுக்கு தெரியாது. அதுக்கு, கரூரில் இருந்து அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர் வந்துதான் சிகிச்சை அளிக்க முடியும்' என்று கை விரித்தனர். இதனால்,இரண்டு மணி நேரம் கழித்து கரூரில் இருந்து வந்த டாக்டர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post