வயிற்று வலியில் துடித்த கர்ப்பிணி... அதிரடியாக காப்பாற்றிய 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ஆதிவாசி இளம்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று திடீரென அந்த பெண்ணிற்கு வயிறு வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரிக்கு வந்த சிறிது நேரத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு நிமோனியா மற்றும் ஜன்னி நோய் உள்ளது. அதற்கான சிகிச்சை இங்கு இல்லை. திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மட்டுமே உள்ளது. அதுவும் 7 மணி நேரத்திற்குள் அழைத்துச்சென்றால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது என்று கூறினர்.

இங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு 365 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் 10 மணி நேரமாகும். இதனால் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இவர்களின் அழுகை சத்தம் கேட்டு ஆஸ்பத்திரி எதிரே இருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஓடி வந்தனர். விபரம் அறிந்ததும் குழந்தையை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று தீர்மானித்தனர்.

அதன்படி இது குறித்து மன்னார்காட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் தகவல் தெவித்தனர். அவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று விபரத்தை கூறினர்.

நேற்று காலை 11. 30 மணிக்கு குழந்தையை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. மன்னார்காட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குழந்தையை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சுக்கு இடையூறு ஏற்படாமல் வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதற்கு அந்தந்த போலீசாரும் உதவி செய்தனர். மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 365 கிலோ மீட்டர் தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து வந்து சாதனை செய்தனர்.

குழந்தையை காப்பாற்ற 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இணைந்து செயல்பட்டதால் காப்பாற்ற முடிந்ததாக பொதுமக்கள் கூறினர். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post