காகங்களுக்கு ‘விசில்’ அடித்து உணவளிக்கும் அணுசக்தி துறை அதிகாரி!!!

மத்திய அணுசக்தி துறை கீழ் செயல்படும் கணக்கு அறிவியல் நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இதன் பதிவாளர் எஸ்.விஷ்ணு பிரசாத் (வயது 55). இவர் பல ஆண்டுகளாக திருவான்மியூர் கடற்கரையில் அதிகாலை நடைபயிற்சி செய்து வருகிறார்.

அப்போது அவர் அந்த பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் வரும்போது ‘விசில்’ அடிக்கிறார், அந்த சமயம் அவரை சுற்றி ஏராளமான காகங்கள் வருகின்றன. அவற்றுக்கு தினமும் விஷ்ணுபிரசாத் காராபூந்தி மற்றும் பிஸ்கெட்டுகளை உணவாக வழங்குகிறார். இதை தினமும் கடற்கரைக்கு வருபவர்கள் செல்போனில் படம் எடுக்கின்றனர்.

இது குறித்து, விஷ்ணுபிரசாத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

5 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகம் என்ற 85 வயது மதிக்கத்தக்க முதியவர், இதேபோல் காகங்களுக்கு உணவு அளித்து வந்தார். நான் தினமும் அதை பார்த்தேன். அவருடன் நண்பராகவும் பழகினேன்.


தினமும் அவரை காலையில் பார்க்கும் போது நண்பர்கள் சாப்பிட்டுவிட்டார்களா? என்று கேட்பேன். தினமும் பிஸ்கெட் வழங்குவதால் காகங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிடப்போகிறது என்று கேலியாகவும் பேசி இருக்கிறேன்.

ஒரு நாள் அவர் காகங்களுக்கு உணவு அளிக்காமல் கடற்கரைக்கு அருகே உள்ள பூங்காவில் உட்கார்ந்து இருந்தார். அவரை பார்த்து ஏன் உணவு அளிக்க செல்லவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், என்னால் நடந்து செல்ல முடியவில்லை. நீங்கள் சென்று உணவு கொடுங்கள் என்று என்னிடம் கூறினார்.

இதனால் 2 நாட்கள் நான் உணவு தொடர்ந்து வழங்கினேன். அதன் பிறகு, அவரை நான் பார்க்கமுடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று பிறகு தெரிந்தது. அவர் விட்டுசென்ற அந்த பணியை இப்போதும் நான் தொடருகிறேன். காகங்கள் கட்டுப்பாடு மிக்கவை என்பதை உணர்த்தும் விதமாக, அவை வரிசையாக அமர்ந்து சாப்பிடுகின்றன. சண்டை போடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post