எம்ஜிஆர். பிறந்த நாளில் சசிகலாவுக்கு எதிராக களமிறங்கும் தீபா...!

ஜெயலலிதா அண்ணன் மகளான தீபா, எம்ஜிஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்த நாளான வருகிற 17 ஆம் திகதி தனது புதிய பயணத்தை தொடங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை அவரது நெருங்கிய தோழியான சசிகலா ஏற்றுள்ளார். இது மட்டுமின்றி அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் அதிமுக வில் அதிருப்தியில் உள்ள தொண்டர்கள் பலர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர்.தீபா தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்று அதிமுக. தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக தீபாவின் வீட்டு முன்பு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் அவர் போட்டியிட வேண்டும் என்றும் பெரும்பாலான தொண்டர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்ட தீபா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழியில் புதிய பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்த நாளான வருகிற 17 ஆம் திகதி இந்த புதிய பயணம் தொடங்கும் என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
 
இதுவரை அரசியல் களத்தை கண்டிராத தீபா, தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் ஆதரவுடன் அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்கு முன்னோட்டமாக தமிழ்நாடு முழுவதும் தீபா பெயரில் பேரவை தொடங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் தீபாவுக்கு ஆதரவாக இரட்டை ரோஜாவை சின்னமாக அறிவித்து தனிக்கட்சியை தொடங்கி உள்ளனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இளைய புரட்சித் தலைவி தீபா (அம்மா) பேரவை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக, அதிமுக செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் வீடுவீடாக இப்படிவம் கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

உறுப்பினர் சேர்க்கை படிவத்தின் மேல்பகுதியில் ஒருபுறம் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் இரட்டை இலை சின்னமும், மறுபுறத்தில் தீபா படத்துடன் இரட்டை ரோஜாவும் அச்சிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் தீபாவின் ஆதரவாளர்கள் பேரவை தொடங்கியிருப்பதால், தமிழக அரசியலில் தீபா முக்கிய இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இது சசிகலாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post