வடக்கு மாகாண அரசியல் களத்தில் குழப்பத்தை தீர்க்கும் முயற்சிகளில் முன்னேற்றம் இல்லை...!

வடக்கு மாகாண அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள், மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் மனு ஒன்றைக் கையளித்திருந்தனர்.

இதையடுத்து, முதலமைச்சருக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் 15 உறுப்பினர்கள் இணைந்து மனுவொன்றை ஆளுனரிடம் கையளித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சரிபாதியாக பிரிந்து, முதலமைச்சருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மனுக்களைக் கையளித்துள்ள நிலையில், இந்த நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான இணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு புறத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மற்றொரு புறத்திலும், இணக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் ஒரு கட்டமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனும், கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனும் நேற்றுமுன்தினம் நீண்டநேரம் தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருந்தனர்.

எனினும், நம்பிக்கையில்லா பிரேரணையைக் கைவிடுவதற்கு தமிழ் அரசுக் கட்சி தரப்பு மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

முதலமைச்சருக்கு ஆதரவாக போராட்டங்கள், பேரணி என்பன நடத்தப்பட்ட நிலையில், நேற்றும் இணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனாலும், குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இணக்க முயற்சிகள் உடனடியாக சாத்தியப்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், இணக்க முயற்சிகளில் ஈடுபடும் தரப்பினர், இன்னமும் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post