சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை விற்க அனுமதி அளிக்கவில்லை – கோத்தா...!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின், இயந்திரங்களை அகற்றுவதற்தோ அவற்றை பழைய இரும்புக்காக விற்பனை செய்வதற்கோ தாம் அனுமதி அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதி அளிப்பதற்கான எந்த ஆவணமும், கையெழுத்திடுவதற்காக வந்ததை நான் பார்க்கவில்லை.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கு அதிபர் ஆணைக்குழுவிடம், தாக்கல் செய்துள்ள சத்தியக் கடதாசியிலேயே, கோத்தாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி உள்ளிட்ட இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவருக்கு எதிராக கோத்தாபய ராஜபக்ச இந்த சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள், சிறிலங்கா இராணுவத்தினரால் , 100 மில்லியன் ரூபாவுக்கு  பழைய இரும்புக்காக வெட்டி விற்கப்பட்டமை தொடர்பாக பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு, விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் -2011இற்கும் 2015இற்கும் இடையில் இந்த மோசடி இடம்பெற்றிருந்தது. விசாரணைகளில் இந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அதிபர் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளித்திருந்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலர் சிறிபால ஹெற்றியாராச்சி, இந்த இரும்பை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனுமதி அளித்துள்ளார் என்று, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தம்மிடம் கூறி, அதிகாரபூர்வ குறிப்பை வெளியிட்டார் என்று கூறியுள்ளார்.

அதேவேளை, இதனை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அவசியம் என்ற உள்ளக கணக்காய்வாளர் பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ள இன்னொரு அறிக்கையும் பாதுகாப்பு அமைச்சில் உள்ளது.

சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்கள் பிரித்தானியா மற்றும் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டவையாகும். ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களுக்கு உற்பத்தியாளர்களார் 100 ஆண்டுகால உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த இயந்திரங்களை வெட்டி எடுக்கப்பட்ட இரும்பு,  சிராஸ் முகமட், யூசுப் அஸ்தான், மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான எக்கநாயக்க ஆகியோருக்கு விற்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான எக்கநாயக்கவுக்கு விற்கப்பட்ட இரும்பின் பெறுமதி 75 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

741 ஏக்கர் பரப்பளவுள்ள சீமெந்து கூட்டுத்தாபன காணியை சுவீகரிக்காமல், இராணுவம் தன்னிச்சையாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் தெரியவந்திருக்கிறது,

இதுதொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் யாழ். படைகளின் தலைமையக தளபதிகளான மேஜர் ஜெனரல்கள் மகிந்த ஹத்துருசிங்க, உதய பெரேரா,  பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலர் சிறிபால ஹெற்றியாராச்சி, சிராஸ் முகமட், யூசுப் அஸ்தான் ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post