திலக் மாரப்பன லொத்தர் சபைகளை பொறுப்பேற்க மறுப்பு...!

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்க திலக் மாரப்பன இணங்கியுள்ளதாகவும், எனினும், அவர் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பனவற்றைப் பொறுப்பேற்க மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க அண்மையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட போது, ஏற்கனவே தன்வசமிருந்த தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகிய அரச நிறுவனங்களும் தனது பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.

அதற்கமைய நிதியமைச்சின் பொறுப்பில் இருந்த இந்த துறைகள், வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய வங்கி பிணை முறி சர்ச்சையை அடுத்து. வெளிவிவகார அமைச்சர் பதவியை விட்டு ரவி கருணாநாயக்க விலகியுள்ளார்.

இதனால் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர், தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகிய நிறுவனங்களை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீண்டும் இந்தநிறுவனங்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக ரவி கருணாநாயக்கவின் மைத்துனர் ரொமேஸ் ஜெயவர்த்தன இருப்பதுடன், தேசிய லொத்தர் சபை தலைவராக அவரது உறவினர் ஒருவரே பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post