'உயிரைவிட எமது உரிமையே மேலானது' கேப்பாபுலவு மக்கள்...!

எமது உயிரைவிட நாம் எமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரிமையே எமக்கு மேலானது என திடீர் பயணமாக இன்றையதினம் கேப்பாபுலவுக்கு விஜயம் மேற்கொண்ட  ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிகளிடம் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை,நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று 219 ஆவது நாளாக கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவத்தலைமையக வாயிலில் தமது சொந்த நிலங்களை கேட்டு போராடிவரும் மக்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேடறிந்த ஐ.நா. விசேட பிரதிநிதியிடம் கருத்து தெரிவித்த மக்கள், நாம் இன்றுடன் 219 ஆவது நாளாக இந்த கொட்டும் மழைக்கும் வெயிலுக்கும் மத்தியில் எமது சொந்த நிலங்களை கேட்டு போராடுகின்றோம். 

எமது நிலங்களை விடுவிப்பதாக அரசாங்கம் பலமுறை பல வாக்குறுதிகளை தந்து எம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது. நாம் எவ்வாறு எத்தனை நாட்கள் இந்த வீதியில் கிடந்து போராடுவது? இன்றைக்கு யுத்தம் முடிந்து 9 வருடங்களாக நாம் அகதிமுகாம் வாழ்க்கை வாழ்கின்றோம் கேப்பாபுலவு என்னும் பெயரில் எம்மை மாதிரிகிராமம் ஒன்றில் அகதிகள்போல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் . 

தொடர்ந்தும் நாம் இவ்வாறு எத்தனை காலம் வாழ்வது எமது தலைமுறை ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த எமது சொந்த நிலைமை எமக்கு வேண்டும் .எமது இனிவரும் சந்ததி அதில் நிம்மதியாக வாழவேண்டும். 

அகதிமுகாம் வாழ்க்கை எமக்கு வேண்டாம் எமது சொந்த நிலம்தான் வேண்டும். நாம் தொடர்ந்து இங்கே போராடிக்கொண்டே இருப்போம் எமது உயிரைவிட எமக்கு எமது உரிமைகளே மேலானது.

எமது பூர்வீகமான கேப்பாபுலவு மண் எமக்கு வேண்டும். எமது கஷ்டங்களை இன்று நேரில் நீங்கள் வந்து பார்வையிடுகின்றீர்கள். உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றோம் நாம் படும் வேதனைகள். சட்ட ரீதியாக உங்கள் நிலங்களை பெறுவதற்கு நீங்கள் ஏதும் முயற்சிகளை எடுத்தீர்களா? என ஐ.நா. பிரதிநிதி கேட்டதற்கு,

ஆம் நாங்கள் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு ஐந்துபேர் இணைந்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம். அந்த காலப்பகுதியில் எமது நிலங்களுக்கு பதிலாக வேறு நிலங்கள் தருவதாக அங்கே இராணுவ தரப்பில் தெரிவித்தார்கள். 

ஆனால் நாம் அதற்கு சம்மதிக்கவில்லை எமது சொந்த நிலம் வேண்டும் என்றே அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு வழிகளில் போராடி வருகின்றோம். காணி விடுவிப்பு அரசாங்க தரப்புடன் கலந்துரையாடினீர்களா என ஐ.நா. பிரதிநிதிகள் கேட்டறிந்தனர்,

காணி விடுவிப்பு தொடர்பில் நாம் மீள்குடியேற்ற அமைச்சுக்கு சென்று கலந்துரையாடலை மேற்கொண்டோம் எம் சார்பில் மக்கள் பிரதிநிதிகளும் பலதுறை அரசுடன் கலந்துரையாடினோம் இருந்தும் இதுவரை எமக்கு எமது நிலங்கள் கையளிக்கப்படவில்லை என கேப்பாபுலவு மக்கள் தெரிவித்தனர்.

ஐ.நா. விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்றையதினம் முல்லைத்தீவின் பல பகுதிகளுக்கு சென்று அங்கு போரால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் மக்களை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post