பேஸ்புக் பாவனையில் உலகளவில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா முன்னிலை!!!

உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்காவை வீழ்த்தி 24.1 கோடி பயனாளர்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 

கையில் மொபைலை எடுத்ததும் உடனே கிளிக் செய்து பார்க்கும் செயலிகளில் பேஸ்புக் முக்கிய இடத்தில் இருக்கிறது. சமீப காலமாக இந்தியாவைப் பொருத்தவரை சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகவேகமாக அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர் மட்டுமன்றி அனைத்து வயதினரும் பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளை தீவிரமாகப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்ப நாட்டில் உள்ள அனைத்து செய்தி, விற்பனை, விளம்பர நிறுவனங்கள் பேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில், பேஸ்புக் சமூகவலைதளத்தை பொருத்தவரை அதன் பயன்பாட்டாளர்களின் விவரங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாவது உண்டு. அதன்படி, கடந்த மாதம் வரையிலான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 


அதில், உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மொத்தம் 24.1 கோடி பேர் நம்நாட்டில் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அதேநேரத்தில் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை 24 கோடியாக உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இதே காலக்கட்டத்தில் 2.6 கோடி பேர் மட்டுமே புதிதாக பேஸ்புக்கில் இணைந்துள்ளனர்.

சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்தாலும், நாட்டின் மொத்த மக்கள் தொகையின்படி கணக்கிட்டால் அது மிகக் குறைந்த அளவுதான். அதாவது, இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் மட்டுமே பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post