நடக்க போகும் குற்றத்தை முன்பே தடுக்கும் தொழில்நுட்பம் - அமெரிக்க போலீஸ் அசத்தல்!!

அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக சிகாகோ, குற்ற சம்பவங்களுக்கும் பஞ்சமில்லாத நகரமாக இருந்து வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களால் தலையை பிய்த்துக் கொண்டு அலைந்த அந்நகர போலீசார் சற்று ஆறுதலடையும் வண்ணம் தனியார் நிறுவனம் ஒன்று புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் சிகாகோவின் 7-வது மாவட்டத்தில் 6 மில்லியன் டாலர்கள் செலவில் புதிய தொழில்நுட்பங்களுடன் அமைந்த கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து, போலீசாரே ஆச்சரியப்படும் அளவிற்கு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்ற குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டின் இதே கால இடைவெளியில் நடந்ததை விட 39% ஆக குறைந்துள்ளது.

கொலைக்குற்றங்களை பொறுத்த வரையில் 33% ஆக குறைந்துள்ளது. துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சில சம்பவங்களும் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக குறைந்துள்ளதாக மாவட்ட போலீஸ் கம்மாண்டர் தெரிவித்துள்ளார். அப்படி என்ன, தொழில்நுட்பம் இதில் உள்ளது? என்ற கேள்வி எழுகிறதா?.

நகரில் குற்றப்பின்னணி இருக்கும் அனைவரின் ஜாதகங்களும் இதில் அடக்கம். சமூக பொருளாதார குற்றம் நிகழ்வதற்கான சூழ்நிலையை முன்னரே கண்டறிவது போன்ற தொழில்நுட்பங்களை இந்த அமைப்பு கொண்டுள்ளது. இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகிறன.


குற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் பகுதிகளை தரவரிசைப்படி அடுக்கியுள்ளதால் போலீசார் எங்கு அதிகமாக கண்காணிக்க வேண்டும்?, எங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்? என்பது எளிதான ஒன்றாக இருக்கிறது. 

இதனால், போலீசார் குழப்பமின்றி தெளிவான திட்டமிடலோடு குற்றம் நடக்கும் பகுதியை அலசி ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களை கண்டறியும் வண்ணம், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சென்சார்கள் நகரின் பல பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த வகை குற்றங்களையும் போலீசாரால் தடுக்க முடிகிறது. அனைத்து குற்றங்களையும் முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும், இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஓரளவு நிலமையை சமாளிக்க முடிவதாகவும், தொழில்நுட்பம் என்பது பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு வழிதான் எனவும் மாவட்ட போலீஸ் கம்மாண்டர் கூறியுள்ளார்.

தற்போது, இதே தொழில்நுட்பமானது சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், லின்கோல்ன், பிலாடேல்பியா, டேன்வார், நெப்ராஸ்கா உள்ளிட்ட சில நகரங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் , அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post