போதைப்பொருள் கடத்தல் வழக்கு - கைதான இந்திய வம்சாவளி இளைஞர் தூக்கிலிடப்பட்டார்!!

சிங்கப்பூரில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி வாலிபரான பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு மலேசியா நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். உட்லான்ட்ஸ் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் அவரது காரை மடக்கி பிடித்த போலீசார் காரினுள்ளே இரண்டு கவர்களில் ‘டயாமார்பைன்’ என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின்கீழ் சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பிரபாகர ஸ்ரீவிஜயனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவரை இன்று தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சர்வதேச பொதுமன்னிப்பு சபையில் வழக்கு தொடர அவரது வழக்கறிஞர் மலேசியா நாட்டில் உள்ள மேல்முறையீட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். இதுதொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணை இன்னும் முடிவடையாததால் இந்த தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.


இன்னொரு நாட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் நமது நாட்டின் சட்ட விதிமுறைகளை புறக்கணிக்க முடியாது. ஒரு நாட்டின் நீதிமன்ற நடைமுறைகளில் மற்றொரு நாடு தலையிட முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில்  பிரபாகரன் ஸ்ரீவிஜயன்(29) தூக்கிலிடப்பட்டார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டு சட்டங்களின்படி 15 கிராமுக்கு அதிகமான அளவில் போதைப்பொருள் வைத்திருப்பது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. அப்படி சிக்குபவர்களை தூக்கிலிட்டுக் கொல்வதற்கு அந்நாட்டு குற்றப்பிரிவு சட்டங்கள் அதிகாரம் அளித்துள்ளன. எனவே, 22.24 கிராம் எடையுள்ள போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபாகரன் ஸ்ரீவிஜயனுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post