யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக அமெரிக்கா - இஸ்ரேல் அறிவிப்பு!!!!

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது. 

இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்துக்கொண்டதை அடுத்து அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கிவந்த நிதியைக் குறைத்தது. எனினும் அமெரிக்கா செலுத்தவேண்டிய பங்களிப்பு நிலுவை கூடிக்கொண்டே வந்தது. யுனெஸ்கோவில் இருந்து விலகுவதற்கு இதையும் ஒரு காரணமாக அமெரிக்கா கூறியுள்ளது.


யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததையடுத்து இஸ்ரேலும் விலகப் போவதாக அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான, அறம் சார்ந்த முடிவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா விலகும்போது அந்த சமயத்தில் இஸ்ரேலும் விலகுவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி வெளியுறவுத்துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பெஞ்சமின் நேதன்யாகு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது. பன்முகத் தன்மை மற்றும் ஐ.நா. குடும்பத்திற்கு இழப்பு என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post